
மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் உன்னதமான தொலைநோக்கு சிந்தனையிலும் அவருடைய அளப்பிய கருணையிலும் உதித்தது டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் காதுகேளாதோர் இல்லம் மேல்நிலைப்பள்ளி. இந்த காதுகேளாதோர் இல்லத்தில் 36 ஆண்டுகளாக பல நூற்றுக்கணக்கான பேச்சு மற்றும் காதுகேளாத மாணவர்கள் பயின்று பயன்பெற்று வாழ்க்கையில் சிறந்து விளங்குகின்றனர்.
காதுகேளாத மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர் பயிற்சி (B.Ed. Special Education-HI) வழங்கும் டாக்டர். எம்.ஜி.ஆர் சிறப்புக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா ஜூலை மாதம் 18ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் கே. ராஜசேகரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளி குழந்தைகள் வாழ்வில் ஒளியேற்றும் இந்த சிறப்பு ஆசிரியர் பணி சாதாரணமானது அல்ல; அது மிகவும் உன்னதமானது. இங்கு அளிக்கப்படும் அனுபவமிக்க பயிற்சியால் திறமையான சிறப்பு ஆசிரியர்கள் உருவாக்கப்படுவார்கள் என நம்புகிறேன். எதிர்காலத்தில் இங்கிருந்து உருவாகி வெளிவரும் ஆசிரியர்கள் பெற்றோரை மதித்து நடக்கும் அறிவும் ஆற்றலும் மிக்க மாணவர்களை உருவாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றவேண்டும் என வலியுறுத்தினார்.
விழாவின் தொடக்கமாக கல்லூரியின் முதல்வர் முனைவர் லதா ராஜேந்திரன் அவர்கள் கல்லூரியின் விரிவான கல்வி அறிக்கையை (2021-2025) வாசித்தார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் பேச்சு குறையுடைய மற்றும் காதுகேளாதோரின் மறுவாழ்விற்காக, உயிரில் வழங்கிய வரலாற்றுப் பின்னணியைக் குறிப்பிட்டார்.
டாக்டர் எம்.ஜி.ஆர் சிறப்புக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் Educate, Empower, Excel என்ற தாரக மந்திரத்தோடு செவித்திறன் குறையடைய மாணவர்களின் அர்ப்பணிப்புள்ள சிறப்பு ஆசிரியர்களை உருவாக்கி வருகிறது.
இங்கு பயிற்சி பெற்ற பெரும்பாலானோர் சிறப்புத் தகுதியிலும் (Distinction), முதல் வகுப்பிலும் (First Class) தேர்ச்சிப்பெற்று சாதனை படைத்துள்ளனர் எனவும், இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் துபாய், கத்தார், மாலத்தீவு போன்ற வெளிநாடுகளின் முன்னணி பள்ளிகளிலும் சிறப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றி வருவதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.






